Wednesday 11 September 2013

சோதோம் பட்டணம்






நிலா வெளிச்சம் ஊருக்குள்ள நுழைய முடியல. பனிமூட்டமும், தூசும் சோதோமை போர்வையா போர்த்திகிட்டு இருக்கு. ஊர் முழுக்க கும்பல், கூச்சல், குடியாட்டம். உடம்புல ஒட்டுத்துணி கூட இல்லாம செலர் ஓடுறாங்க. அவங்கள துரத்திக்னு இன்னொரு கும்பல். மரத்தடியில, கூடாரத்துல அய்யோ... இன்னாது... கீழே கெடத்தி அவுங்க மேல ஏறி உட்கார்ந்துக்னு வலிக்குதே.. அம்மா... வுடுங்கடா என்னை வுடுங்கடா வலிக்குதுடா... +2, காலேஜ் பசங்க இங்க எப்படி வந்தாங்க? என்தொடை வழியா ரத்தம் வழியுதே...


சதை மரம் ஒன்னு ஊர் மத்தியில கிடுகிடுனு மேல மேல வளந்துகினே போவுது. ரொம்ப உயரமா வெள்ளையா மொந்தையா பச்சை மாட்டுக்கறி செவப்பு மொனையோட. அதுமேல தொங்கிக்னு ஒரு கூட்டம். ஒடம்பெல்லாம் நடுங்குது.

லோந்து வூட்டுக்கு முன்னால தீப்பந்தங்கள் வெச்சீக்னு குடிபோதைல நெறைய பேர் நிக்குறாங்க. லோத்தோட செவப்பு கைகால்லாம் நடுங்குது.

லோத்து, சொன்னது சொன்னதுதான். மொதல்ல அந்த ஆளுகள வெளியே அனுப்பு. இல்லாகாட்டி வூட்ட கொளுத்திடுவோம்

ஆதியாகமம் 19: 1-26

அய்யா வானாங்கயா. அவுங்க என் வூட்டுக்கு வந்திருக்ர விருந்தாளிக அவுங்கள விட்டுடுங்க. வேணும்னா ஒன்னு செய்யலாம். எனக்கு ரெண்டு அழகான பொண்ணுங்க இருக்காங்க. அவர்களை வேன்னாக்க அழைச்சின்னு போங்க. உங்க இஷ்டம் போல வெச்சிக்கோங்க.ஒரு கத்தி அவன் தொடைய கீறி ரத்தம் வழியுது.

எங்களுக்கு அந்த அழகான ஆளுகதா வேணும் டேய் கொளுத்துங்கடா.

அய்யா அய்யா இருங்க. தோ பேசிட்டு வர்ரேங்க அதுவரைக்கும் ஒண்ணும் செஞ்சிடாதீங்க.

உள்ளே போறான் லோத்து. ரொம்ப அழகாத்தான் தெரியராங்க. வெள்ளையா ஓயரமா பெரிய கண்களோட. தேவதூதர்கள்னா சும்மாவா? ரெக்கைகளை காணோம். லோந்து பெஞ்சாதிக்கு உருண்டை மூஞ்சி அம்மா மாதிரி. ஆனா கருப்பு. பின்னாடி பசங்க ஒளிஞ்சுனு நிக்குதுக, பாவம்... தேவதூதர்கள் மொகம் செவந்திருக்கு.

லோந்து இந்த ஊர்ல நீ மட்டும்தான் நல்லவன்னு கர்த்தர் நம்புகிறார். உன் குடும்பத்தோட சோதோமைவிட்டு உடனடியாக நீ வெளியேற வேண்டும். நாங்க பாவங்கள் நிறைந்த சோதோமை தீக்கறையாக்க போகிறோம். இது கர்த்தரின் கட்டளை  ம்ம், கௌம்புங்க.

பின் வழியா எல்லோரையும் இட்டுக்குன்னு இருட்டுக்குள்ள போறான் லோத்து. யாரும் பார்க்கல. முன்கதவுல டமார் டமார்னு சத்தம். லோத்தோட ஆடுகள் ம்.ம்.மா என்று கத்துது. லோத்து பெஞ்சாதி 2 குட்டி ஆடுகளை தடவிக்கொடுக்கராங்க. திரும்பி திரும்பி பார்த்துக்கின்னே நடக்கரா.

இனி நீங்க விரும்பின மாதிரி சோவாருக்கு போகலாம். ஆனா திரும்பிப் பார்க்கக் கூடாது. மீறினால் உப்பித்தூணாகி விடுவீர்கள்.தேவதூதர்கள் எச்சரிக்கை செஞ்சாங்க. திரும்பிப் பார்க்காம நடக்றாங்க. மொதல்ல லோத்து பசங்க, அப்புறம் லோத்து, கடேசியா லோத்து பெஞ்சாதி. அவ மொகத்துல கோவம் தெரியுது.

நீயெல்லாம் நல்லவனாக்கும். மாமா பையா.லோத்தை பார்த்து பயங்கர கோவமா கத்துறா. லோந்து திரும்பியே பாக்கலே. இன்னும் வேகமாக நடக்கிறான். பசங்க ரொம்ப மின்னாடி நடக்குறாங்க. விடிகால ஆயிடிச்சு. சூரியன் மலைக்கு அப்பால இருந்து எட்டி பாக்குது. வானம்பூரா செவப்பு நெறத்த வாரி எறைக்குது. இந்த  கரும்புகை எங்கேருந்து வருது? அய்யோ சோதோம் திகுதிகுன்னு எரிஞ்சினிருக்கு. வூடுக, மரங்க, மனுசங்க, மாடுக, சதை மரம் எல்லாம் நெருப்புல எரிஞ்சி சாம்பலாவுது. புள்ளி புள்ளியா ஓடுறது என்ன? ஓட்டகங்க. ஆடுக மலை மேல ஏற பாக்குதுக, முடியல. உருண்டு கீழ விழுதுக நெருப்பு பந்துகளா. ஒரு புறா சர்ர்னு செங்குத்தா எரிஞ்சிக்னே மேல போயி தொப்புனு கீழ சரியுது. ஊர் எல்லைல தேவதூதர்கள் கைய இடுப்புல வெச்சிக்னு வேடிக்கை பார்த்துக்குனு... இப்ப பெருசா வெள்ளை ரெக்கைகள் தெரியது. பறக்க போராங்களா?

திடீர்னு ஒரு கொய்ந்த அழுவுற சத்தம் நெஞ்ச கிய்ச்சி போட்ற மாதிரி.  ம்மாஒரு கொய்ந்த இல்ல... பத்து பதினஞ்சி இருக்கும். தத்தக்கா பித்தகானு ஓடி வருதுக. ஒடம்பு முழுக்க நெருப்பு. பார்க்கவே முடியல.

லோத்து பெஞ்சாதி சடர்னுநிக்றா. திரும்பிப் பாக்றா அய்யயோ கொழந்தைக... காப்த்துங்கமார்ல அடிச்சிக்னுற அழறா. எனக்கும் அழுகை வருது. பாவிகளா... 

கொஞ்ச நேரத்தில் அவசத்தம் நின்னு போவுது. அசைவே இல்லை. கைய விரிச்சமேனிக்கு அப்படியே உப்புத் தூணாக நிக்குறா. ரெண்டு கண்ணீர் துளி தொத்துனு மணல்மேல விழுது. லோத்து மகள்களோட சோவாரு எல்லையை அடைஞ்சிட்டான். பின்னால் அவ வராளா இல்லியானு திரும்பிப் பாக்கவே இல்ல. தேவதூதர்கள் உப்புதூண பார்த்து ஏளனமா சிரிக்றாங்க.

கீ போர்ட்லிருந்து எழுந்தார் இறைவன். ஜெயம், ஜெயம், எனவே... மியூசிக் கேட்குதே! இங்க எப்படி வந்திச்சி நம்ம சர்ச்?

ஜோஷ்கா திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. உடல் முழுக்க தெப்பமாக வியர்திருந்தது. 22 வறான்டா பையன்களின் மூச்சுவிடும் சப்தம், அந்த சின்ன அறைக்குள் சீராக கேட்டுக் கொண்டிருந்தது கொசுக்களின் ரீங்காரத்துடன். 7சி சாமின் விசுக் விசுக்கென்று கை சூப்பும் சப்தம் வேறு. ஒன்றுக்கு வருவதுபோல் இருந்தது. எழுந்துபோய் மூடியுருந்த  பிரம்மாண்ட ஜன்னலைத் திறந்தான். குபூக்கென்று குளிர்காற்று அவன் உடலைக் கவ்வியது. சற்று தூரத்தில் ஈஸ்டருக்காக மலிகைப்பூ அலங்காரத்துடன் கம்பீரமாக நின்றிருந்தது சர்ச். நிலா வெளிச்சம், புகை, பனிப்போர்வயைக் கடந்து தரைக்கு வர முடியவில்லை. ஈஸ்டர் ஆராதனைப் பாடல்களை வாசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் கொயர்மாஸ்டர். சர்ச் கடிகாரம் 3 அடித்து வசனம் சொல்லிற்று.

கழிவறைக்காகக் கீழே போனால் காலேஜ் பசங்களிடம் மாட்டிக்கொள்வோம் என்று தோன்றியது.

தட்டுதடுமாறி தன் அலமாரியில் இருந்த தன் டம்ளருடன் ஜன்னல் அருகே வந்தான். புளிய மரம் லேசாகக் காற்றில் ஆடியது. டம்ளரில் சப்தமில்லாது ஒன்றுக்கு இருந்து, ஜன்னல் வழியே புளியமரத்தின் மீது ஊற்றினான். மரத்தின் வழியே மௌனமாக வழிந்து சென்றது. திரும்பிப் பார்த்தான். யாரும் பார்க்கவில்லை. டவல், சோப்புடன், புளியமரத்தின் ஒன்றுக்கு வழியாத பகுதி வழியே கிழே இறங்கி கிணற்றில் தண்ணீர் இறைத்துக் குளித்தான். வார்டன் தன் மகள்களுடன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பது ஜன்னல் வழியே தெரிந்தது. மனைவியைக் காணவில்லை. நைட் டியூட்டி என்று சொன்னது நினைவுக்கு வந்தது. வார்டனின் மச்சினிச்சி ஏசம்மாள் அதே அறையில் படுத்திருப்பதை அப்போதுதான் கவனித்தான். கீழ்அறைக்கு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். பெரியபையன்கள் எவனும் எழுந்திருக்கவில்லை. அவர்கள் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்தபோது குலை நடுங்கியது.

துண்டை காயப் போட்டுவிட்டு மறுபடி புளியமரத்தின் வழியே விறுவிறு என்று மேலேறினான். மூன்றாம் வார்த்தை* மரம் என்று எழுதப்பட்ட பெயர்ப்பலகை மீது சிறுநீர் பளபலித்தது. சோப்பை வைத்து விட்டு, ஜன்னலருகே வந்தான். புளியமரம் தன் கிளைகளையெல்லாம் தன் பக்கம் திருப்பி அழைப்பதை உணர்ந்தான். மரத்திலேறி அகன்ற மேல்கிளையில் காலை நீட்டிப்படுத்தான். மரம் அவனை மெல்ல தாலாட்டியது. ம்மா...என்று முணுமுணுத்தபடி கிளையை அனைத்தும் கொண்டான் அப்படியே தூங்கிப் போனான்.

*தன் தாயைநோக்கி அதோ உன் மகன் என்றார் அவர். அந்த சீஷனை நோக்கி அதோ உன் தாய் என்றார்.
                                      - யோவான் 19 : 26,27

     கோயில் கடிகாரத்தின் 4 மணி வசனம் அவனை எழுப்பியது. கிளைவழியே ஜன்னலுக்குள் குதித்தான். எல்லோரும் குளிக்கச் சென்றிருந்தனர். பாஸ்டர் பெரன்ட்ஸ் சாமுவேல் ராஜரத்தினம் கிறிஸ்மஸ்க்கு வாங்கித் தந்திருந்த பஞ்சுமிட்டாய் நிற சட்டையை மாட்டிக் கொண்டான். பாண்ட் போடும் போது ஊசி குற்றியது போல் பின்புறம் வலித்தது. அம்மா எங்குருப்பாள் என்று யோசித்தான். நெல்லூரில் நரசிம்மாராவுக்கு வேறு குழந்தை பெற்றிருப்பாள் என்று நினைக்கும்போது அழுகை வந்தது. சென்ற வருஷம் பெரிய வெள்ளியன்று கடைசியாக அவள் வந்தபோது வயிறு சற்று பெரியதாக இருந்தது. அன்றுதான் நரசிம்மராவைப் பார்த்தான். அப்பாவைவிட உயரமாக, முரடனாகத் தெரிந்தான். அயனாவரத்தில் கறிக்கடை வைத்திருப்பதாக மட்டும்தான் சொன்னாள். இனி இங்கு தான் வரப்போவதில்லை என்று ஏன் சொல்லவில்லை என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. மரமும் மௌனமாக பலமுறை இவனைத் தட்டிக்கொடுத்ததேதவிர காரணம் கூறவில்லை. சார்லஸ், எபி, அண்ணா ஆரோன் ஆகியோர் ஹாஸ்டலில் சேர்ந்த  ஒருவாரத்திலேயே கீழ் அறையில் குப்புறப் படுக்கவைத்து, வன்புணர்ச்சி செய்தபோது ஏற்பட்ட வலியைவிட அம்மா நினைப்பு ஏற்படுத்திய வலிதான் ரொம்ப பெரிதாக இருந்தது. என் தேவனே, என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர் என்று * நான்காம் வார்த்தை மரத்தின் கீழ் பலமுறை புலம்பி, ஜெபித்திருக்கிறான். தலையை சீவிக்கொண்டான். கோரைமுடி மறுபடி நெற்றியில் வந்து விழுந்தது. ட்ரங்க் பெட்டியிலிருந்து பைபிள், பாட்டு புத்தகத்தை எடுத்துக்கொண்டான். செதுக்கியிருந்த லோத்து குடும்பத்தின் சாக் சிற்பங்களை அட்டைப் பெட்டிக்குள்ளிருந்து எடுத்துப் பார்த்தான். சரியாக 5 மணிக்கு வரிசையாக நின்ற போது, காலேஜ்பசங்கள் வார்டன் வீட்டுக்கு ஆயில் கேன் எடுத்துப் போவதைப் பார்த்தான். பாட்டுப் பாடியபடியே சர்ச்சுக்கு நடந்தனர். ஆரோன் கெட்ட வார்த்தைகளோடு அதே பாடலைப் பாடிவந்தான். ஆல்டர் அருகே விசுவாச நாடாரின் மதுரைமல்லி மேலிருந்து போதையுடன் இவனை அழைத்தது. விசுவாசநாடார் பெருமிதத்துடன் முன்வரிசையில் தெரிந்தார்.

* மார்க்கு 15 : 34.

எபி அண்ணா பின் வரிசையில் அமர்ந்தபடி இவன் பின்புறத்தை முழங்காலால் தடவினான்.

     5.30க்கு ஆராதனை ஆரம்பித்தது. பிவுப் பச்சைநிற ஸ்டோலுடன் போதகருடன் கம்பிரமாக ஆல்டரில் ஏறிநின்றார். குறுந்தாடி லேசாக நரைத்திருந்தது. நீண்ட கறுப்பு கயிற்றில் அவர் கழுத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த தங்கச் சிலுவை விளக்கொளியில் மின்னியது.

ஆண்டவரின் உயிர்த்தெழுதல் நித்யவாழ்வை நமக்கு அருளுகிறது. நாம் மரணத்தை அஞ்சாமல் சந்திக்க உதவுகிறது. நம் வாழ்வில் உள்ள துக்கத்தையெல்லாம் மாற்றி சந்தோஷத்தை அருளி ஆண்டவர் வழி செய்கிறார். எனவே ஈஸ்டர் பண்டிகை வாழ்வின் கொண்டாட்டம்.பிஷப் தாபுயைத் தடவியபடியே இவனைப் பார்ப்பது போல் தெரிந்தது.

     திரும்பிப் பார்த்தான். கூட்டம் பிதுங்கி வழிந்தது. போதகர் பரிசுத்த ஆவி இறங்கியது போல் உணர்ச்சிவசப்பட்டு ஜெபித்தார். கறிக்கடையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஆடுகள் ஞாபகத்துக்கு வந்தது. சபையார் இன்று நிறைய ஆட்டுக்கறி வாங்குவார்கள். வீடுகளில் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். இதுதான் பிஷப் சொன்ன கொண்டாட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் இவனுக்குத் வந்தது. இரத்தம் சிந்தும் ஆடுகளுக்கு உயிர்தெழுதல் உண்டா என்று அடிக்கடி தோன்றுகிறது. ஆராதனை முடிந்து வெளியில் வரும்போது வார்டன் அழைத்தார்.

வீட்டில் ஏசம்மாள் இருப்பா, வெந்நீர் எடுத்துக்னு பிஷப் ரூமுக்கு போ.வார்டன் மச்சினிச்சி குலுங்கும் மார்பகத்துடன் இவன் கன்னத்தை கிள்ளிக்கொடுத்த வெந்நீர் ஃபிளாஷ்குடன் பிஷப் தங்கியிருந்த கெஸ்ட் ரூமுக்குப் போனான். பங்களாவின் சற்று ஒதுக்குப்புறமான அறை. தரை முழுக்க கறுப்பு கிரானைட். அறை அருகே யாரும் இல்லை. ஜன்னல் வழியே பார்த்தான். பிஷப் பக்கத்தில் சுசிலா டீச்சர். அவள் வெள்ளை முதுகின் மீது பிஷப்பின் வலதுகை மேலும் கீழுமாக நகர்ந்து கொண்டிருந்தது.

கதவுக்கு நேராக வந்து அய்யாஎன்றான்.

பிஷப் திடுக்கிட்டு இவனைப் பார்த்தார். என்ன?”

வென்னீருங்கய்யா.

டேபிள்ள வெச்சிட்டு போ.

வேகமாக வெளியே ஒடி வந்தான். *1முதல் வார்த்தை ஆலமரத்தின் கீழ் நின்றான். உடம்பு வெட வெடத்தது. காற்றில் விழுதுகள் அவன் முதுகை வருடியது. ஒவ்வொரு முறையும் ஆரோன், சார்லஸ் இவன் முதுகைத் தடவிக் கொடுத்தது, எச்சிலால் ஈரமாக்கியது நினைவுக்கு வந்தது.
வார்டன் இவனை அழைத்தார்

என்னா குடுத்துட்டியா?”

வெச்சிட்டேங்கயா.

பிஷப் அய்யா ரூம்ல வேற யாரு இருந்தது?”

சுசிலா டீச்சருங்கய்யா

பத்தியா நா சொல்லல? என்று மச்சினைச்சியை பார்த்து சிரித்தார் வார்டன்.

சரி உன்னோட சாக் உருவங்கள ரெடி பண்ணு. பேரண்ட் மீட்டிங்க்கு பிஷப் அய்யா வராரு. அப்ப அவர்கைல காட்டலாம். அப்புறம் உன்னோட ஃபாஸ்டர் பேரண்டஸ் இன்னிக்கு வரல.

சென்ற கிறிஸ்மசில் பாஸ்டர் பேரண்டஸ்வுடன் முருங்கை மரத்தின் கீழ் போட்டோ எடுத்த போது, இரண்டு மகள்களை அனைத்து நின்றிருந்தனர். இவன் ஓரமாக இருந்தான். *2 முருங்கை மர வசன போடு முழுக்க கம்பளி பூச்சிகள் அப்பி இருந்தன.


*1 பிதாவே இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது. இன்னது என்று அறியாதிருக்கிறார்கள்.                                                                           -   லுக்கா 23 : 34

*2 தாகமாய்இருக்கிறேன்                                                         -   லுக்கா 19 : 28



வறாண்டாவில் மணி அடித்ததும் பொங்கலுக்கு வரிசையில் நின்றான். பின்னால் நின்ற மாணிக்கம் ட்ரஸ் நல்லாருக்குடீகண்ணுஎன்று மார்பை  அழுத்தினான். சிலர் சிரித்தனர். சாப்பிடப் பிடிக்காமல் அப்படியே கொட்டி விட்டு அழுதடியே மாடிக்குச் சென்றான். ஜன்னல் வழியே புளியமரத்தின் மீது ஏறினான். மரம் அவன் கண்ணீறைத் துடைத்தது. நீ எதுக்கும் கவலைப்படாதே. நான் எப்பவும் உன்னோட இருப்பேன்.என்று தேற்றியது. நான் ஹாஸ்டலை விட்டு போன பொறவுஎன்று கேட்டான். எப்பவும். என் ஆயுள் முடியும் வரை”, என்ற போது அவனால்  அழுகையை அடக்க முடியவில்லை.

11 மணிக்கு உள்ளே வந்தான். வரும்போது மூத்திர வாடை அதிகமாகத் தெரிந்தது. தன்னைப் போல வேறு சிலரும் மரத்தின்வழியே ஒன்றுக்கு இருக்கிறார்கள் என்று தெரிந்தது. மரம் வாயைத் திறக்க மறுத்தது. எல்லோரும் மாமரத்தின் கீழ் கூடியிருந்தனர். இவன் பெட்டியிலிருந்து சாக் சிற்பங்களையும், ஒரு அட்டையையும் எடுத்துக் கொண்டு மாமரம் அருகே வந்து பின்வரிசையில் தனியாக அமர்ந்தான். பெற்றோர்கள் தங்கள் மகன்களுடன் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்ததைக் கவனித்தான். குட்டிப்போட்ட பூனை போல் வார்டன் உலாவிக் கொண்டிருந்தார். உள்ளிருந்து மாட்டுக்கறி பிரியாணி வாசனை மூக்கைத் துளைத்தது. எச்சிலை விழுங்கிக் கொண்டான். குற்றரோயிகளுக்கான ஐக்கிய விருந்தில் இரண்டு மட்டன் துண்டை எடுத்ததுக்காக எட்வின் சார் அடித்தது நினைவுக்கு வந்தது. *இரண்டாம் வார்த்தை மரத்தை திரும்பி பார்த்தான்.

*இன்று நீ என்னோடே கூட பரதேசில் இருப்பாய்          -லுக்கா 23 : 43

          சரியாக 12 மணிக்கு பிஷப், போதகருடன் வந்தார். சற்று தூரத்தில் உடன் வந்தவர்கள் நின்று கொண்டனர். வார்டன் சால்வை போட்டு வரவேற்ற பின் பிஷப் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார். இவன் குனிந்து ஒளிந்து கொண்டான். பாட்டு, பிரசங்கம், ஜெபம் முடிந்தபிறகு பிஷப் ஒவ்வொரு பையனாக அரையாண்டு மதிப்பெண்களைக் கேட்டார். இவன் அறிவியல், கணிதம், பாட மதிப்பெண்களைச் சொன்னபோது, “என்ன மார்க் இது? சிங்கிள் டிஜிட். மாதாமாதம் 700 ரூபாய் செலவுக்கு பணம் கொடுக்கிற ஃபாஸ்டர் பேரண்ட் என்ன நினைப்பார்? அவன் பேர்என்ன.

அய்யா சாமுவேல் ராஜரத்தினங்கய்யாவார்டன் கைகட்டியபடி சொன்னார்.

அடுத்தமுறை இவ்வளவு குறைவா வாங்கினா ஹாஸ்ட்டல்ல தொடர்ந்து படிக்க முடியாது. புரியுதா?” தலையாட்டினான். உள்ளங்கை வியர்த்துக் கொட்டியது.

கூட்டம் முடிந்த பிறகு வார்டன் இவனை வரவழைத்தார். அய்யா ஜோஷ்வா சாக்ல உருவங்கள் செய்யறதுல கெட்டிக்காரங்கயா.

அப்படியா?”

மேஜையில் உருவங்களை நிறுத்தினான். முதலில் லோத்து. அவனுக்கு முன்னால் மகள்கள். அவனுக்குப் பின்னால் லோத்து மனைவி, அடுத்து

தேவதூதர்கள் ரெக்கைகளுடன்.

என்னது?”

லோத்து குடும்பங்கயாஎன்றான் இவன்

லோத்து மனைவியை கறுப்பா பெயிண்ட் பண்ணி இருக்க. உப்புதூண் வெள்ளை தானே?” “இல்லீங்கயா, லோத்து பொஞ்சாதி, பிள்ளைங்க எந்த தப்பும் பண்ணலீங்கயா. அதனால கறுப்பா இருக்காங்க. உப்புக்கல் இல்லீங்கயா.

லோந்து, தேவதூதர்கள் மேல ஏன் வெள்ளை பெயிண்ட் அடிச்சிருக்க?”

அவுங்கதான் கெட்டவங்கயா தப்பு செஞ்சவங்கயா.

அதுகோசரம் வெள்ளை பெயிண்ட் அடிச்சியிருக்கிறீயா.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. பிஷப் தாடியைதடவியபடி போதகரைப் பார்த்தார்.

சண்டே ஸ்கூல்ல இப்படித்தான் தியாலஜி சொல்லித்தரீயா?”

இல்லீங்க பிஷப்

பிஷப் வேகமாக வெளியேறினார். அவருக்குப் பின்னால் போதகர் இவனை முறைத்துப் பார்த்து விட்டு கூட்டத்தோடு சென்றார்.

நியூயார்க்கிலிருந்து பிஷப் ஆர்தர் அருஸ்தாஸ் ரெவ்ரண்ட் சகாயத்திற்கு அனுப்பிய மின் அஞ்சல் : 01.09.2013    18.08

சிலுவைப்பாட்டின் 7 திருமொழிகளில் பி.எச்.டி பண்ணுவது குறித்து கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

நான் பிஷப்பாக இருந்தபோதுதான் கிறிஸ்துநாதர் ஆலயம் அருகே 2005-ல் பெரிய வெள்ளியன்று 7 மரங்களை தேர்ந்தெடுத்து 7 பெயர்ப்பலகை எழுதப்பட்டன.

அது முதல் அந்த மரங்களுக்கு கீழ் பல கூட்டங்கள் நடத்தப்பட்டன. முதல் மரம் - பாஸ்டரேட், ஆர்பிட்ரேஷன் குழு கூட்டங்கள். 2 திருமொழி மரம் - குஷ்டரோகிகளுக்கு அன்பின் ஐக்கிய விருதுகள்  3வது மரம் - குடும்ப உறவுகளை பறை சாற்றியபடி மாணவர் விடுதிக்கு அருகில். 4,5 திருமொழி மரங்கள் - வள்ளமை மிகுந்த உபவாச கூட்டங்கள். *6, *7 திருமொழி மரங்கள் - விடுதியின் நிர்வாக குழு கூட்டங்கள்.

*பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.   -லுக்கா 23 : 46

*முடிந்தது     - யோவான் 19 : 30

துரதிஷ்டவசமாக மூன்றாவது வார்த்தையைத் தாங்கிய புளிய மரம் வெட்டப்பட்டு விட்டது. அதன் அடிமரம் முழுக்க உப்புப் பூத்து மரம் சாக ஆரம்பித்து விட்டது. ஹாஸ்டல் பிள்ளைகள் சிறுநீர் கழித்து அந்த மரத்தை பாழாக்கி விட்டனர். 2008ல் ஜோஷ்வா என்ற எட்டாம் வகுப்பு மாணவன் காலேஜ் படிக்கும் மாணவனின் ஆண்குறியை கடித்துக்குதறி பெரிய பிரச்சனையாகி விட்டது. இந்த சம்பவம் அந்த மரத்திற்குக் கீழேதான் நடந்தது. கடவுள் கிருபையால் அவன் பிழைத்துக்கொண்டான். அந்த ஜாஷ்வாவை நிர்வாகக்குழு முடிவின் படி ஹாஸ்டலிலிருந்து வெளியேற்றி விட்டோம். அதன்பிறகு அந்த மரத்திலிருந்து இரவு நேரங்களில் அடிக்கடி ஒரு அழுகுரல் கேட்டுக் கொண்டிருப்பதாக பிள்ளைகள் கூறினர். வார்டனும் போதகரும், அப்பிடிக் கேட்டதாக என்னிடம் புகார் செய்தனர். தாங்க முடியாத மூத்திர நாற்றம் வேறு. எனவே மரத்தை வேரோடு எடுத்து விட்டோம்.

அங்கு தற்போதுள்ள போதகரிடம் சீக்கிரமாக வளரக் கூடிய ஏதேனும் ஓரு மரத்தை உடனே நடச்சொல்லுங்கள். அதில் 3-வது  திருமொழியின் போது போர்டு வைக்க வேண்டும். அதிக ஆழத்துக்கு வேர்கள் ஊடுரூவாத பல மரங்கள் இருக்கின்றன.

ஏழு திருமொழி மரங்கள் என்ற உன்னதமான கான்செப்டை நாம் விட்டுவிடக் கூடாது.

6 comments:

  1. A good story. Davvid Gunasekar

    ReplyDelete
  2. Sodom and hostel both with homos related excellently. Loth wife, joshuah are innocent but punished. Its an irony. His mothdr substitute tree speaks to us. It also is loth wife salt made. Joshuah and tree linger. Josh too is crucified by system. Sodom bur ing a visual treat. A great work. Keep it up R. Rajadurai

    ReplyDelete
  3. Sodom erinthe vigham sila varghaikalil kannuku munnal vanthathu. Esu in varthaiukku. pughu vilakkam. Hostdl vazhkaihil. ithu sagajam. Joshuah ka nukkul ifjkiran. Stanly william

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. The story line that combines the old city of ruthless sodom and the new age boys hostel, in terms of sexual illicit behavior and pointless judging were stunning. The life of the boy told through the authors voice as if the author witnessed it as his friend makes us to travel with lot of emotions, bounded up. The social irony behind the lawmakers and the 7 trees is indeed a great creative work. The email drafted from the father who is interested in the trees rather than the deep moral reflects the realistic society of the human world. The portrayal of black and white color through the emotional understanding of the boy is so convincing about the torture he has undergone through his childhood. Excellent making Sir.

    ReplyDelete
  6. அருமையான கதை. பல விடயங்களை மிகச்சிறப்பாக சொல்லுகின்றது.

    ReplyDelete